<$BlogRSDURL$>

Thursday, December 16, 2004

நாத்திகம் பயில்
--------------

தன் இளமையிலாவது ஒருவன் நாத்திகனாக இருக்கவேண்டும். பல காரணங்கள்.

1. நாத்திகம் மனிதனை விடுவிக்கிறது. மூதையர் சிந்தனைக் கட்டுகள்தான் ஒவ்வொருமனிதனுக்கும் மிகப் பெரும் தளை. தந்தையை எதிர்ப்பது சிறுவன் மனிதனாகும் பயணத்தின் முதல் அடி. தந்தையை விட மதமும், கடவுள் எனும் கருத்துருவமும் அப்பாதையின் மிகப் பெரும் தடைகள். நாத்திகமே அவனுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது.

2. நாத்திகம் மனிதனை தூய்மைப் படுத்துகிறது. மனிதனின் சிந்தனைகள்குழு,இன,மத,தேச மாசுகளால் கறைபடாமல் துல்லியமான ஒரு சிந்தனைத் தளத்தைவழங்குகிறது. அவனை திரும்பத்திரும்ப இவ்வுண்மையை எதிர்கொள்ளச் செய்து சிந்தனையை வழிப்படுத்தி அவன் செயல்களை தூய்மையாக்குகிறது.

3. நாத்திகம் மனிதனை பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவனை தன் செயல்களுக்குதன்னையே பொறுப்பேற்க கற்றுத்தருகிறது. எந்த முன்முடிபுகள் மிக்க சுமைதாங்கிகளையும் அவனுக்கு அது அளிப்பதில்லை. அவன் சுமையை அவன் தான் சுமக்கவேண்டும். இரக்கம் கொண்டு கடைத்தேற்ற யாரும் எதுவும் இல்லை.

4. நாத்திகம் மனிதனை இரக்கமுள்ளவனாக, அன்புடையவனாக மாற்றுகிறது. பிற மனிதரை, பிற உயிர்களை தன்னைப் போலவே எண்ண வைக்கிறது. வாழ்வில் கிடைக்கும்ஒவ்வொரு கணத்தையும் இழக்காமல் அனைவரையும் நேசிக்க கற்றுத்தருகிறது. மனிதவாழ்வின் நிலையில்லாமையும் இலக்கில்லாமையும், அவனை ஏங்கோ என்றோ அடையும்சொர்க்கம் போன்ற புனைகதைகளில் இளைப்பார விடாமல் இக்கணத்தை, இச்சூழலை,இங்குள்ள உயிர்களை செல்வமாக போற்றும் மனதைத் தருகிறது.

5. நாத்திகம் மனிதனை மனிதனாக்குகிறது. மதங்கள் மனிதனை மிருகம் என்கின்றன.பாவி என்கின்றன. அவனை தேவனாக்க முயல்கின்றன. மனிதனின் இருத்தல் நிலையை கீழானதாகக் காட்டி வசைபாடி அவனை குற்றவுணர்சியும் பய உணர்சியும்கொண்டவனாக்கி மனச் சமனை நிலைகுலைக்கின்றன.

6. நாத்திகம் மனிதனை அறநெறியாளனாக ஆக்குகின்றது. விடுபட்ட மனமுடைய,தூய்மையான சிந்தனைகள் கொண்ட, பொறுப்புள்ள, அன்பு நிறைந்த ஒரு மனிதன்,சுய அறம் இன்றி வாழ இயலாது. மனிதனுக்கு அந்த சாத்தியத்தை நாத்திகம்வழங்குகிறது. முழு நாத்திகனாக இருப்பது ஒரு அசாதாரணமான கடினமான ஒரு நிலை. ஒவ்வொருமனிதனுக்கும் இந்தநிலை வாழ்வின் இளமையிலாவது வாய்க்க எல்லாம் வல்ல இறைவன் வாய்ப்பளிக்கட்டும். (:-)

This page is powered by Blogger. Isn't yours?