<$BlogRSDURL$>

Wednesday, January 25, 2006

Thanks Meenaks - congrats 

வந்தாள், கண்டாள், வென்றாள்
======================
(அல்லது)

போனேன், பார்த்தேன், பூத்தேன்
========================

உன் மேல் கவிந்திருக்கும்
மௌனத்தின் நீர்நிலை மேல்
பார்வைகளால் கல்லெறிகிறேன் நான்.
ஒற்றை வளையமாய்
ஒரு புன்னகையைத் தோற்றுவித்து
உன்னுள்ளே மூழ்கடிக்கிறாய் நீ.

என் முன்கதைச் சுருக்கத்தை
உன் காதருகே
உலவ விடுகிறேன் நான்.
நாம் இருவருக்கான எதிர்காலக் கனவை
அறையின் கூரையெங்கும்
பரவ விடுகிறாய் நீ.

நான் எழுதியிருக்கும்கவிதைகள்
பிடிக்குமென்கிறாய் நீ.
என் எதிரிலிருக்கும்கவிதையைப்
பிடிக்குமென்கிறேன் நான்.

உன் எதிர்பார்ப்புகளின் தவிப்பும்
என் விருப்பங்களின் இருப்பும்
நேர்கோட்டில் சந்திக்கின்றன.
என் கற்பனைகள் ஒவ்வொன்றும்
உன் கண்களில் தத்தம்
முகம் பார்த்துக் கொள்கின்றன.

உன் குறும்புப் பார்வைகள்
என் மீசையைப்பிடித்திழுத்து விளையாடுகின்றன.
இதுவரை
தனித்தனியே
தேடிக் கொண்டிருந்த
நமக்கான பிரபஞ்ச முடிச்சை
சேர்ந்து கண்டுகொண்ட பரவசத்தில்
மிதக்கிறோம் நாம்.

சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலும்,
சில தினங்களுக்குப் பிறகும்,
என் காதுகளில்இன்னும் ஒலித்தபடியே இருக்கிறது,
என்னைப் பிடித்திருப்பது பற்றிய
எனது கேள்விக்கு
நீ பதிலாய்த் தந்த
ஒரு சொல்,
ஓர் எழுத்து,
ஓர் ஓசை,
"ம்..!"

-- மீனாக்ஸ்

பின் குறிப்பு: ஹி.. ஹி..!! ஆமாமுங்கோ..!!

நன்றி : மீனாக்ஸ்

Friday, January 06, 2006

காதலினால் மானிடர்க்கு - நன்றி தங்கமணி

இது இலையுதிர்க்காலத்தில் ஒரு மாலை நேரத்தில் இலைகள் சடசடவென்று உதிர்ந்ததுபோல, வீட்டை நெருங்க இருக்கையில் எதிர்பாராது நம்மை நனைத்து விடுகிற மழை போல புரிந்துகொள்ளப்படலாம்; எதுவாயினும் இதைப்பற்றி பேசமுடியாது. ஒருவகையான monologue அல்லது soliloquy. மேலும் இது பொதுத்தளத்தில் நிகழ்வதல்ல என்பதை நினைவிற்கொள்க. இது இரண்டு பகுதிகளாக இங்கு வரும்)

மறுபடியும் ஒன்றை நினைவூட்டுகிறேன். அப்படியே என்னால் காதல் என்றால் என்னவென்று நேரிடையாக வரையறுக்க முடியாது. காதலைப்பற்றிய நம்பிக்கைகள், கற்பனைகள், எதிர்பார்ப்புகள் இவற்றில் இருந்து உன்னை விடுவிக்க முடிந்தால் காதலோடு இருப்பது சாத்தியமாகலாம்.
நான் சிறுவனாக இருந்தபோது திருவிழாக் காலங்களில், இரவுகளில் கோயிலுக்குப் போய் பாட்டுக்கச்சேரியும் தெப்பமும் பார்த்துவிட்டு வரும் போது நன்கு ஊதிக்கட்டப்பட்ட பளபளப்பான ஆப்பிள் பலூன்களை வாங்கிவருவோம். அப்போது அவைகளில் ஒரு புதுமையின் பளபளப்பு மின்னும். வண்ண விளக்குகளை அது அழகாக எதிரொளிக்கும். அந்த பலூனை இரவில் கட்டிலினடியில் கட்டிவைப்போம். காலையில் எழுந்தவுடன் பார்ப்பேன். பளபளப்பு இருக்காது சற்றே சுருக்கம் தெரியும். அடுத்த நாள் இன்னும் சிறிதாக சுருங்கி நாளடைவில் அது நிஜ ஆப்பிள் அளவுக்கு வந்துவிடும். பிறகு பலூன்களை வாங்கும் போது ஒரு உள்ளார்ந்த மாற்றம் நேர்ந்திருந்தது.
காதலைப்பற்றிய கற்பனைகளின் கதையும் இதுதான். காதலைப்பற்றிய கற்பனை உன்னைக் காதலில் இருந்து வெகுதூரம் எடுத்துச் சென்றுவிடும். அந்த பலூன் ஒளிமங்கிச் சிறிதாவதற்கு முன்பே வழியில் வெடித்திருந்தால் பலூனைப்பற்றிய கவர்ச்சி மிஞ்சியிருக்கும். திருமணத்தில் முடியாத, உடைந்த காதல் மிகவும் புனிதமாக, அழகாக இருக்கிறது.

ஏனெனில் கற்பனையின் வெளியேதான் வாழ்வு தவழ்கிறது. பூக்களின் மீது சிதறிக்கிடக்கும் காலைப்பனியைப் போல காதலின் மீதும் கற்பனைகளும் நம்பிக்கைகளும் இருக்கவே செய்யும். அவை அழகான தோற்றம் தருகின்றன. ஆனால் வெகுவிரைவில் அவை உலர்ந்துவிடும்.
காதலைப்பற்றிய மகத்தான கற்பனைகளைக் கட்டுபவர்கள், காதலிக்காதவர்களும், இளங்காதலர்களும், காதல் திருமணம் நிறைவுறாதவர்களுமே ஆவர். ஏனெனில் அவர்களிடம் தான் செலவழியாத கனவுகள் நிரம்ப உள்ளன. நுரையலையும் அலைகளைப்போன்று காதல் அவர்களிடம் வீசிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருமுறை காலை நனைத்து ஆடைகளை ஈரமாக்கும் போதும் குழந்தைகளைப்போல சிலிர்ப்படைகிறார்கள். மாலை நேரத்தில் கடற்கரைக்கு வருகிற குழந்தைக்கும், கடற்கரை மீனவக்குழந்தைக்கும் கடல் வெவ்வேறாக இருக்கிறது. அதுதான் காதலர்களுக்கும் காதல் நிறைவேறியவர்களுக்கும் இடையே கிடக்கிற தொலைவும்.
பூக்களைப் பறித்துக்கொண்டு ஓடிவருகிற சிறுமிக்கும், பூ விற்கிற சிறுமிக்கும் பூக்களைப்பற்றிய அபிப்பிராயம் வெவ்வேறாக இருக்கிறது. ஆனால் இருவரும் உண்மையில் பூக்களோடு இல்லை. பூவைப்பறித்த சிறுமிக்கு பூ ஒரு சாகச உணர்வாக, உடமைப்பொருளாக, அறிபடுபொருளாக இன்பம் தருகிறது. பூ விற்கிற சிறுமிக்கு அது வேறு மாதிரியான உணர்வுகளைத் தரலாம். பூ பறித்த சிறுமியின் இன்பமே காதலர்களின் இன்பம். காதல் தருகின்ற இந்த புதுமை உணர்வை கவிதைகளும், நம்பிக்கைகளும் புனிதத் தன்மைவாயந்ததாகச் செய்கின்றன. ஆனால் இந்தப் புதுமை உணர்வு எவ்வளவு புனிதத்தன்மை வாய்ந்ததாக நாம் நம்பி இருந்தாலும், அதை அப்படியே காப்பாற்ற நாம் எவ்வளவு முயன்றாலும் ஒருநாள் அது மெல்ல மெல்ல புனிதமற்றதாகிவிடுகிறது. அர்த்தமிழந்து போகிறது. அதைக்கண்டு நாமே குற்ற உணர்வும் ஏமாற்றமும் அடையத் தக்கவிதத்தில் நம் கண் முன்னாலேயே மாறிப்போகிறது. ஒரு காலத்தில் இன்றியமையாததாக இருந்த ஒன்று இப்போது முக்கியமற்று போனதை நாம் எப்படியோ ஜீரணித்துக்கொள்ளப் பழகுகிறோம். நமது கற்பனைகளை, நம்பிக்கைகளை அடுத்தடுது நமது குழந்தைகள், பணி உயர்வு பெறுதல் போன்ற விசயங்களில் நாட்டப்பழகுகிறோம்.
இப்போது டீக்கு போனோம். குழந்தைகள் இரண்டு, அம்மாவோடு வந்தன. அவற்றின் தலையில் காலையில் வைத்துக்கொண்ட மல்லிகைச்சரம் வாடிப்போய் தொங்கிக்கொண்டிருந்தது. அவைகளிரண்டும் குதித்துக்கொண்டே சரக்கொன்றை மரத்தடிக்கு வந்தன. மஞ்சள் சரக்கொன்றை. அவைகளின் அம்மா இரண்டு பேருக்கும் சில சரங்களைப் பறித்துக்கொடுத்தாள். ஆர்வமும், ஆசையும் கொண்டு குழந்தைகள் அதைச் சுற்றின. அம்மா, ‘பூவைச் சுற்றாதே, எவ்வளவு அழகா இருக்குது பார்!’ என்றாள். குழந்தைகள் ஒரு கணம் பார்த்துவிட்டு மறுபடியும் சுற்றின. சுற்றுவது அவைகளை கிளர்ச்சி அடையச்செய்தது. அம்மா பழகிப்போன வார்த்தைகளைச் சொன்னாள். குழந்தைகள் பூக்களைச் சுற்றி அதை அறிவதன் மூலம் ஆனந்தமடைந்தன. எவரும் பூக்களோடு இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் குழந்தைகள் அதில் பழகிப்போகலாம். அப்போது காலையில் தலையில் சூடிக்கொண்டு இப்போது வாடித் தொங்கும் மல்லிகைச் சரத்தைப்போல இதுவும் வசிகரமற்று போகலாம்.
காதலின் அற்புதத்தன்மை பெரும்பாலும் மனதால் உண்டாக்கப்படுகிறது. மனம் ஒன்றை அறிந்துகொள்ளும் வரை புதிர் நிரம்பிய அதை அற்புதமாகப் பார்க்கிறது. அறிந்துகொண்டபின் அது தன் அற்புதத் தன்மையை இழந்துவிடக்கூடும். ஆனால் காதலில் உண்மையாகவே ஒரு அற்புதம் இருக்கிறது. ஆனால் அது மனம் சார்ந்தது அல்ல. அது மனதின் உற்சாகக் கூச்சல்களுக்கு வெகு அடியில் மிக மெதுவாக இயல்பாக யாருடைய கவனதுக்காகவுமின்றி நிகழ்ந்துகொண்டிருக்கலாம். பொதுவாக மனம் உருவாக்கும் அற்புதங்கள் தன்னைத் தானேயோ பிறரையோ கவரும் உத்திகளேயாகும்.
ஆனால் உண்மையான அற்புதம் என்பது முழுக்க முழுக்க வேறுவகையானது. அது யாருடைய கவனத்துக்குமின்றி வெறும் இருப்பில், ஓய்வில், ஒப்படைப்பில் நடக்கிறது. அதை மனம் காண முடியாது.
ஒரு பிரகாசமான வண்ணக்கூளங்களடங்கிய வாணவேடிக்கையை மனம் அற்புதமெனலாம். ஆனால் பனி நனைத்த மண்மீது ஒரு மலரிதழ் முயற்சியின்றி விழுந்துகிடப்பதில் அற்புதமிருக்கிறது.
அழகிய பட்டை தீட்டப்பட்ட வண்ணக்கல்லொன்றை மனம் அற்புதமெனலாம்.நட்சத்திரங்களின் ஒளியில் நதி மெல்ல நகர்ந்து கலக்கிறது. எதிர்கொண்டு மோதும் அலைக்கரங்களில் கீற்றாய் விண்மின்களின் ஒளி தெறிக்கிறது. அப்போது ஒரு வெறுமை நிரந்தரத்துவம் பெற்று அக்கணத்தில் உறைகிறது. அங்கொரு அற்புதம் அந்த வெறுமையாய் இருக்கிறது.

தன்னந்தனியனாய் ஒரு சிகரத்தில் உயிரைச் செலுத்தி ஏறுகிற ஒருவனை அற்புதமெனலாம்; ஆனால் இருள் நீக்கி வீசும் முதல் ஒளிக்கீற்றில் எதைப்பற்றியும் பயமின்றி மெல்ல மண்பிரித்து முளைவிடும் விதையில் இருக்கிறது அற்புதம்.
மனதின் அற்புதங்கள் ஒரு உயர்வில், வெற்றியில், அழகில், அசாதரணத் தன்மையில் உண்டாகின்றன.வாழ்வின் அற்புதங்கள் சாதரணத் தன்மையில், வெறும் பூரண இருப்பில், ஒப்படைப்பில் நிகழ்கின்றன.
மனதின் அற்புதங்கள் எப்போதாவது, அல்லது எதிர்பாராமல் நிகழ்கின்றன; வாழ்வின் அற்புதங்கள் தொடர்ந்து எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டு நிகழ்கின்றன.
மனம் வாழ்வை அற்புதங்களால் நிறைக்க எண்ணுகிறது; வாழ்வு அற்புதங்களாலேயே நடக்கிறது.
மனதின் அற்புதம் விதிகளை (law) மீறுவதில் தோன்றுகிறது; வாழ்வு விதிகளாலேயே (order) நடக்கிறது.
காதலில் மனம் அற்புதங்களைக் கண்டு குதுகலிக்குமிடத்து அதை பெரிதுபடுத்தாதே! கவனத்தில் கொள்ளவோ கடிந்துகொள்ளவோ வேண்டாம். ஆனால் அந்த அற்புதங்கள் விரைவில் நீர்த்துப்போகுமெனெ நினைவிற்கொள். மாறாக உன்னை சாதரணத் தன்மையில், நடுவில் இயல்பாக வைத்திருக்க வேண்டி விழிப்புணர்வுடன் இரு. ஆனால் இயல்பாக இருக்க போராடாதே! மனதின் அற்புதங்களுடன் ஒன்றிப்போய் கலந்திருக்காமலும், அதைக்கண்டிக்காமலும், வெறும் சாட்சியாய் இருந்தாலே சாதரணத் தன்மை, இயல்புணர்வு சாத்தியமாகும். ஒரு ஓடையைத் தெளியவைக்க எடுக்கும் முயற்சிகளைப்போன்றது போராட்டம் மூலம் சாட்சியாய் (விலகி) நிற்கமுயல்வது.
காதலின் அற்புதம் அதன் ஒப்படைப்பில் நிகழ்வது.
ஒப்படைப்பது என்றவுடன் மனம் உயர்ந்த விசயங்கள், பரிசுகள், அல்லது தன்னையே ஒப்படைத்தல் என்று நினைக்கக்கூடும். ஆனால் உண்மையான ஒப்படைத்தல் என்பது நிபந்தனைகளை, எதிர்பார்ப்புகளைக் களைந்துவிட்டு நின்றல். ஒப்படைத்தல் என்பது எவரிடமும் அல்லது எதிர்பாலாரிடம் நிகழவேண்டிய ஒன்றல்ல. அது தன்னளவில் நிகழவேண்டியது; காதல் அதற்கு ஒரு அழகிய களமாக இருக்கும்.அப்போது மழைக்காலத்தில் ஒவ்வொரு மழைத்துளியிலும் இலைகள் துடிப்பதைப்போன்று ஒரு அற்புதத்தின் இயல்பான துடிப்பைக்காண முடியும்.

This page is powered by Blogger. Isn't yours?