<$BlogRSDURL$>

Thursday, November 03, 2005


உலகின் அதிகாரம் படைத்த பெண்மணி மட்டுமல்ல... கறுப்பு நிறத்தாலும், எளிய தோற்றத்தாலும்தன் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று நிரூபித்தவர் காண்டி!

அவரைப் பார்க்கும் யாருக்குமே ஆச்சர்யம் தொற்றிக் கொள்ளும்!

‘உலகின் அதிகாரம் படைத்த நூறு பெண்மணிகள்’ பட்டியலில்,முதலாவது இடத்தில் வைத்து புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை கொண்டாடிய பெண் இவரா?

வெளிவிவகாரத்துறை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் எடுக்கும் எந்த முடிவுமே காத்திருப்பது இவர் தலையசைப்புக்காகவா?



ஆம்! ஐம்பத்தோரு வயதான காண்டலீசா ரைஸ் என்ற கறுப்பு சிறுத்தைதான் இன்று உலகின் ‘நம்பர் ஒன் அதிகாரம் படைத்த’ பெண்மணி. அமெரிக்காவின் ‘செகரெட்டரி ஆஃப் ஸ்டேட்’ என்ற வல்லமை மிக்க பதவியில் இருந்தபடி உலகத் தலைவர் களையெல்லாம் உற்று நோக்க வைத்திருப்பவர். அடுத்த அமெரிக்க அதிபராக வரக்கூடும் என்று தேர்தல் ஆரூடங்களில் அடிபடுபவர். எல்லாவற்றுக்கும் மேலாக, கறுப்பு நிறத்தாலும், எளிய தோற்றத்தாலும் எந்த ஒரு தனி மனிதரின் வளர்ச்சியையும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதற்கு மிகப் பெரும் உதாரணமாக திகழ்பவர்.

அமெரிக்காவில், அலபாமா மாநிலத்தில் 1940 -& 1950களில் இனத் துவேஷத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கறுப்பின சிறுமியிடம், “நீ நகரின் பெரிய சான்ட்விச் கடையில், மற்ற எல்லா வெள்ளைக்கார குழந்தைகளுடன், சேர்ந்து உண்ணக்கூட அருகதை அற்றவளாக இப்போது கருதப் படலாம். ஆனால், நீ நினைத்தால், ஒருநாள் அமெரிக்க அதிபர் ஆகக் கூட முடியும்!’’ என்று சொன்ன பெற்றோரின் தன்னம்பிக்கைக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். அந்த வார்த்தைகளின் மந்திர சக்திதான் காண்டி என்று செல்லமாக அழைக்கப்படுகிற டாக்டர் காண்டலீசா ரைஸை இத்தனை உயரங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

பெண்களுக்கு ஏகப்பட்ட சுதந்திரம் உள்ளது என்று கருதப்படுகிற அமெரிக்காவிலேயே, இன்னமும் பெண்களை ஆண்களுக்கு சமமாகக் கருதுவதில் நிறைய தயக்கங்கள் உண்டு. இங்கேயும் பெண் என்பவள் கணவனுக்கு பின் நின்று அவனுக்கு ஆதரவளிப்பவளாக, நல்ல வீட்டரசியாக, ஒரு பாரம்பரிய குடும்பத் தலைவி என்ற வட்டத்துக்குள் வைத்தே பார்க்கப்படுகிறாள். அவளை தனித்தியங்கும் சக்தியாக, ஒரு நாட்டை நிர்வகிப்பவளாக அடையாளம் காண தயங்குகிறார்கள். இப்படியரு சூழ்நிலையில், நாட்டு நிர்வாகத்தில்... அதுவும், பழமைவாத எண்ணங்கள் கொண்ட, நிற ரீதியான பாகுபாடு களில் நம்பிக்கை கொண்ட குடியரசு கட்சியின் ஆட்சியிலேயே வல்லமை மிக்க இடத்துக்கு காண்டலீசா வந்திருப்பது சாதாரண விஷயமல்ல!

ஜமைக்காவிலிருந்து அமெரிக்கா வுக்கு குடியேறிய ஒரு தேவாலயப் பாதிரியாருக்கும், இசை ஆசிரியருக் கும் மகளாகப் பிறந்த காண்டலீசாவின் இளமைப் பருவம், இன வேறுபாட்டுத் தீயினால் சுடப்பட்டது. ‘‘இதைக் கடக்க வேண்டுமெனில் மற்றவரை விட இரண்டு மடங்கு திறமையை எப்போதும் நான் வெளிப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்!” என்கிறார் காண்டலீசா. அப்படி அவர் வெளிப்படுத்திய திறமைதான் அவரை ‘செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்’ என்கிற பதவிக்கு வந்த இரண்டாவது பெண் (முதலாமவர் -மடலின் ஆல்பிரைட்) மற்றும் இரண்டாவது கறுப்பினத்தவர் (முதலாமவர் காலின் பவல்) என்ற அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

அதிகார மையத்துக்கு மிக நெருங்கியவர் என்று வர்ணிக்கப்படும் காண்டலீசாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தன்னுடைய 15&வது வயதில் பியானோ வகுப்புகள் படிக்க ஆரம்பித்த காண்டலீசாவுக்கு ஜோஸஃப் கார்பெல் என்ற விரிவுரையாளர் எடுத்த உலக அரசியல் வகுப்பு, அவருடைய வாழ்க்கையையே திசை மாற்றி, ‘பொலிடிகல் சயன்ஸ்’ பிரிவில் ஆர்வம் கொள்ள வைத்தது. அதில் முதுகலைப் பட்டம் பெற்ற காண்டலீசா, தன்னுடைய இருபத்தாறாவது வயதில் அதே துறையில் டாக்டர் பட்டமும் பெற்றார். பிறகு, சோவியத் யூனியனைப் பற்றி ஆர்வம் கொண்டு படிக்கத் துவங்கிய இவர், ‘சோவியத் யூனியன் ஸ்பெஷலிஸ்ட்’ என்று கருதப்பட்டார்.

இன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அப்பா சீனியர் புஷ் அதிபராக இருந்தபோது, ‘‘சோவியத் யூனியன் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் காண்டலீசா ரைஸ் சொன்னதுதான்!’’ என்றபடி ரஷ்ய அதிபர் கோர்பசேவுக்கு காண்டலீசாவை அறிமுகப்படுத்தி வைத்தது ஒன்று போதும், இவரது ‘சோவியத் ஞானம்’ பற்றி சொல்ல. அப்போது, முப்பத்தைந்தே வயதான அந்த இளம் கறுப்பின பெண்ணை ஆச்சரியம் ப்ளஸ் பிரமிப்போடு பார்த்தார் கோர்பசேவ். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருந்த பனிப்போரை அமைதி யான முறையில் முடிவுக்குக் கொண்டுவர, சீனியர் புஷ்ஷ§க்கு பெரும் உதவிகரமாக இருந்தவர் காண்டலீசா.

ஆங்கிலத்தைத் தவிர பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மொழிகளிலும் ஆளுமை உள்ள காண்டி, கால்பந்தாட்ட விளையாட்டு ரசிகர். பியானோ வாசிப்பதில் ஆர்வமுள்ள இவர், தொழில் முறை கலைஞர்களுடன்கூட மேடையில் பியானோ வாசிப்பதுண்டு.

காண்டி, முதன் முறையாக 1977&ல் அரசுத் துறையில் ஆலோசனைகள் வழங்கத் தொடங்கினார். மென்மையாக, தோழமையின் இதத்தோடு பேசுபவர் என்று நண்பர்களால் புகழப் படுகிறவர் காண்டி. அதே சமயம், விடாமுயற்சி மற்றும் பிடிவாதத்துக்கும் பெயர் பெற்றவர். இவரை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் குப்புற விழுந்ததை அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக தூண்கள் எல்லாம் கதை கதையாக சொல்லும்.
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் காண்டலீசாவுக்கு இருக்கிற செல்வாக்கு ரொம்ப ரொம்ப அதிகம் என்கின்றன, அதிகார வட்டாரங்கள். உலக வர்த்தக மைய இடிப்புக்கு பிறகு நடைபெற்ற முக்கியமான, பதட்டம் நிறைந்த ஆலோசனைக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் ஜார்ஜ் புஷ், காண்டியை இருக்கச் சொல்லியிருக்கிறார். காண்டி பேச வேண்டுமென்பதுகூட முக்கியமில்லை. ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்த பிறகு விஷயத்தை கிரகித்துக் கொள்ள தனக்கு உபரியாக, நம்பகமான கண்களும், காதுகளும் தேவைப்பட்டன புஷ்ஷ§க்கு. அந்தளவுக்கு காண்டி முக்கியமானவர்.

வெளி விவகாரங்களில் போதிய அளவு அனுபவம் அற்ற ஜார்ஜ் புஷ்ஷை போன்றதொரு அதிபரின் பாதுகாப்பு ஆலோசகராக இருப்பதில், காண்டலீசாவுக்கு சங்கடங்களும் உண்டு.

உலக வர்த்தக மைய இடிப்பு தொடங்கி, இராக் போர், தற்போது நியூ ஆர்லியன்ஸ் நிகழ்வு வரை மீடியாக்களில் இவர் தலை ஏகத்துக்கும் உருட்டப்பட்டது. காண்டி இந்தப் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்தபோது கொடுத்த பேட்டி இன்னொரு உதாரணம். “அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாட்டு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய எதிர் மறையான எண்ணங்களை எப்படி மாற்றப் போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “ஆஃப்கனிலும் இராக்கிலும் அவர்கள் சார்பாகத்தான் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது!” என்று காண்டி பதில் சொல்ல, அதை எதிர்க்கட்சி ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு கேலி செய்தன.

அரசியல் ரீதியாக மட்டுமில்லை... பெண் என்பதால், இவர் உடை உடுத்துவதை, காலணிகள் அணிவதைக்கூட ‘செக்ஸி’ என்று மீடியா கழுகுக் கண்ணோடு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது. இவர் பணிபுரிந்த ‘செவ்ரான்’ எண்ணெய் நிறுவனம், தன் ஆயில் டாங்கர் ஒன்றுக்கு இவர் பெயரை வைத்து கௌரவப்படுத்தியதுகூட மீடியாவின் வாய்க்கு அவல் ஆகவும், அவசர அவசரமாக பெயர் மாற்றப்பட்டது. இத்தனை சலசலப்புக்கு மத்தியிலும் ஏற்றுக் கொண்ட தலைமைக்கு தோழமையாக, இரும்பினை போன்ற உறுதியோடு எதிர்ப்புகளை, லட்சியம் செய்யாது காண்டி போய்க் கொண்டிருப்பதில், இவரை விமர்சிப்பவர்கள்கூட வாயடைத்துப் போய் நிற்கிறார்கள்.

இவரை கவனித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க மீடியாவின் மண்டையைக் குடையும் முக்கியமான கேள்வி இது... “2008 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டால், குடியரசுக் கட்சி வேட்பாளராக காண்டி அறிவிக்கப்படுவாரா?” என்பதுதான் அது.
பேட்டிகளில் இந்தக் கேள்விக்கு, உறுதியாக மறுப்பு தெரிவித்து வரும் இந்த இரும்பரசி, ரஷ்யாவில் பதிலளித்த ரேடியோ பேட்டி ஒன்றில் ‘‘ஆம்’’ என்று வாய் தவறி(?!) சொல்லிவிட்டு, பிறகு அவசர அவசரமாக அந்தப் பேட்டியிலேயே மறுப்பு தெரிவித்து விட்டார்.


உள்ளே அடைகாத்துக் கொண்டிருக்கும் பெற்றோரின் வார்த்தைகள் லேசாக தலை நீட்டி இருக்கிறது போலும். அந்தக் கனவு முட்டை மட்டும் பொரிந்து விட்டால், அமெரிக்க கறுப்பின வரலாற்றில் அது நிச்சயமாகவே ஒரு புதிய அத்தியாயம்தான்!

This page is powered by Blogger. Isn't yours?