<$BlogRSDURL$>

Friday, February 17, 2006

நன்றி : சுந்தரவடிவேல் 

நேத்து ஒரு வரலாற்றாசிரியர் பேச்சுக்குப் போனேன். தலித் நடுத்தர வர்க்கம் அப்படின்னு சொல்றாங்களே இது நடந்திருக்கா, இந்த நடுத்தட்டுக்கு என்னென்ன பிரச்சனைகள் அப்படிங்கறதப் பத்திப் பேசினார். அவர் பேரு ஞானேந்திர பாண்டே, சுருக்கமா ஞான் பாண்டே, ஞாவன்னா வராத வாய்க்கு க்யான் பாண்டே (Gyan Pandey). எமொரி பல்கலைக்கழகத்துல பேராசிரியர். இப்பதான் ஜான் ஹாப்கின்ஸ்லேருந்து எமொரிக்குப் போயிருக்கார். இவர் இந்தியப் பிரிவினையைப் பத்தியும், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவைப் பத்தியும் ஆராய்ச்சி செஞ்சு புத்தகமெல்லாம் எழுதியிருக்காராம். அமெரிக்காவுல இருக்க கறுப்பர்களையும் இந்திய தலித்துகளையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்றார். ரெண்டு பேருக்கும் இருக்க நெருக்கடி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுங்கறார். தலித் பத்தின ஆராய்ச்சியை வட இந்தியாவுல மட்டுந்தான் செஞ்சிருக்கார். அவர் நேத்து பேசினதச் சுருக்கிக் கீழ தர்றேன்.

நடுக்குடி

நடுக்குடி, நடுத்தட்டு, நடுத்தர வர்க்கம்னா யாரு? பொதுவாச் சொன்னா, பரம்பரைச் சொத்து இல்லாதவங்க. கீழ கெடந்து மேல வந்தவங்க. உழைக்கணும், சாதிக்கணும்னு துடிக்கிறவங்க. தன்னையும், உலகத்தையும் பத்தின உணர்நிலையோட இருக்கவங்க. பணத்தாலயும், படிப்பாலயும் மட்டும் நிர்ணயிக்கப் படாதவொரு கூட்டம். இவங்களுக்கு உதாரணமாச் சொல்லனும்னா பதினெட்டு பத்தொம்பது நூற்றாண்டு இங்கிலாந்துல இருந்த பிரமிட் அமைப்புச் சமுதாயத்துல நடுவுல இருந்தவங்க. இவங்க குடிகள் அவ்வளவே. இவர்கள் ஆள்வோர்களில்லை. அமெரிக்கக் கறுப்பர்களானாலும் சரி, இந்திய தலித்துகளானாலும் சரி, அவர்களுக்குள்ள ஒரு நடுத்தர வர்க்கம் தொடங்கினது ரொம்ப அண்மையிலதான். இதுக்குக் காரணம் தெரியும். அடிமைத்தனம். இப்போது முளைத்திருக்கும் தலித் நடுக்குடிக்குத் தான் நடுக்குடியா அல்லது தலித்தா என்றொரு உளைச்சல் இருந்து கொண்டேயிருக்கும். நீ எங்கிருந்து வந்தன்னு நினைச்சுப் பாருன்னு உடன்பிறந்த கூட்டம் கேட்கும். கீழே இருக்க தலித் கூட்டம் எங்களுக்கு என்ன செய்றன்னு கேக்கும். அதே நேரத்துல மத்த நடுக்குடிகளோடயும் ஆடணும். அப்போ நா யாரு தலித்தா, நடுக்குடியா? ஒரு பிராமண நடுக்குடி அப்படிங்கறது ரொம்பப் பழகிப் போன ஒண்ணு. நடுக்குடியில பிராமணர்களுக்கோ அல்லது வேறு “உயர்” சாதி நடுக்குடிக்கோ இல்லாத பிரச்சினைகள் தலித்துகளுக்கு இருக்கு. இவர்களது நடத்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப் படும். பொதுத் தளத்தில் இவர்கள் யாரென்பது அடிக்கடி நினைவூட்டப் படும். நடுத்தட்டுக்கு வந்த பின்னும் தொடர்ந்து தாக்கும் இந்த தலித் என்ற குறியீடு மறைவது ரொம்பக் கடினம்.
இதுக்கு மூனு உதாரணங்களைச் சொல்லலாம். இதெல்லாம் உதாரணந்தான். இதைப் போல புள்ளி விபரம் நிறைய சேக்கலாம். ஆனா ஒரு நெலமயப் புரிஞ்சுக்க இந்த உதாரணங்களே போதும்னு நெனக்கிறேன்.

1. பல்வான்சிங், ஐ.ஏ. எஸ்

1959ல ஐ.ஏ.எஸ்ல தேறி வேலையில சேர்ந்தார். அந்தக் கால கட்டத்துல எல்லாரையும் போல சமுதாயத்தை மாத்தனும்கற மனநிலையில இருந்தவர். 1964ல பதவி விலகினார். நடந்தது என்ன? யாரோ ஒரு தலித். முடி வெட்டிக்கப் போயிருக்காரு. கடைக்காரர் வெட்ட முடியாதுன்னார். இல்ல வெட்டணும்னு தலித் கேட்க. அப்பன்னா இத்தன ரூவா குடுன்னு கூலிய உயர்த்திக் கேட்க. சரின்னு தலித் ஒத்துக்கிட்டாலும், கடைக்கு வெளியில ஒக்கார வச்சு முடி வெட்டிவிட்ட கேஸ் ஒன்னு. இத விசாரிச்சாரு பல்வான் சிங். இந்த வன்முறையைக் கண்டிச்சு எழுதியிருக்கார். வந்தது அரசச் செயலர் ஓலை. விசாரணை. அதுவரைக்கும் நல்லா வேலை செய்றன்னு சொன்ன உயரதிகாரியெல்லாம் உன் வேலை மோசம், இது தப்பு, அது தப்பு, சாதாரண விஷயத்தையெல்லாம் பெருசாக்குற, நீ ரொம்ப உணர்ச்சி வசப் படுற, ஒத்துப் போமாட்டங்கிற அப்படின்னெல்லாம் சொல்ல ஆரம்பிக்கிறாங்க. வேலை மாத்தல் வருது. கேள்வி கேக்குறார். கடைசியில ஒன்னும் முடியாம பதவி விலகுறார். அப்புறமா ஒரு புத்தகம் எழுதியிருக்கார் - Balwan Singh’s autobiography: an untouchable in the IAS.

2. டாக்டர் அம்பேத்கார்

நல்ல படிப்பாளி. முன்னேறனும்னு ஆர்வத்துல உந்தப் பட்டவர். சுதந்திரத்துக்கப்புறம் காங்கிரஸ் கட்டின முதல் நடுவணரசுல சட்ட அமைச்சரா இருந்தார். 1951ல ஒரு பிரச்சினையில பதவி விலகினார். சுதந்திர இந்தியாவோட சட்டங்களை எழுதினதுல இவருக்கு முக்கிய பங்கு இருக்கு. இவரை இந்து முறைச் சட்டம் (Hindu Code Bill) விவகாரத்துல பதவி விலக வச்சது சாதீயம். இவர் இந்து மதத்துல இருக்க சாதீயம், சாதிய வச்சு மக்களை நசுக்குற உத்தி, பெண்ணடிமைத்தனம், எல்லாத்தையும் சட்ட பூர்வமா விலக்கப் பாத்திருக்கார். இதுக்காக, எல்லா மக்களுக்குமாக சமத்துவமாகச் சட்டங்களை ஆக்க இந்து முறைச் சட்டத்தை முன் வைத்தார் (இது இன்றளவும் நடைமுறைப் படுத்தப் படாதவொன்று). பாராளுமன்றத்துல கார சாரமான விவாதம் நடக்குது. இவர் இந்து மதத்துல இருக்க சாதிப் பிரிவினையை விமர்சிக்கிறார். உடனே கோவிந்த் மால்வியா முதற்கொண்டு எல்லா இந்துத்துவவாதிகளும் இவரைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இறுதியில் தான் உயர்குடிக்காரனென்று வெளிப்படையாகவும், அம்பேத்கார் ‘சண்டாள்’ என்று மறைமுகமாகவும் விளிக்கப் படுகிறது. இது பாராளுமன்றத்தில். ஒரு சட்ட மேதைக்கு எதிராக.

3. ஒரு பத்திரிகையாளர்

இந்தக் காலத்து ஆளு. பேரு சொல்லலை. ராஷ்ட்ர சஹாரா அப்படிங்கற இந்திப் பத்திரிகையில பத்தி எழுத்தர். தலித் பிரச்சினைகளைப் பத்தி எழுதுறார். வருது கட்டுக் கட்டா வாசகர் கடிதம். பல நூறு கடிதங்கள் நன்றி சொல்லி, வழி காட்டச் சொல்லி, இப்படியும் இருக்கான்னு ஆச்சரியப்பட்டு, நிறைய சக தலித்துகள்கிட்டேருந்து. இன்னொரு பக்கம் திட்டித் திட்டி உயர்சாதிக் காரங்ககிட்டேருந்து. கொலை மிரட்டலும். உன் சாதிப் பெண்டுகள் 70 பேரை நாங்க தினமும் வன்புணர்றோம், இன்னும் உனக்குப் புத்தி வரலயாடா தேவடியாப் பயலே? உட்பட ஆபாச வார்த்தைகளின் அத்தனை படிநிலைகளிலும் கடிதங்களைப் பார்க்கலாம். இதையெல்லாம் தாண்டி வருகிறது மிகவும் நாசூக்கான, சமத்துவபுர ஜெண்டில்மேன் டைப்புல ஒரு கடிதம், அதுதான் வக்கிரத்தின் உச்சம். அன்புள்ள திரு…வணக்கம். நல்லா எழுதுறீங்க. தலித் நல்லாயிருக்கனுங்கறதுல எனக்கும் உடன்பாடே. ஆனா நீங்க சொல்லுங்க, நீங்க ஒரு தலித்தா, அல்லது இந்தியனா? இந்தியனா இருக்கேன்னு சொன்னீங்கன்னா, தயவு செஞ்சு இந்தியாவ உடைக்காதீங்கப்பா. இதுல இருக்க பிரச்சினையெல்லாம் போதும், மேலும் மேலும் பிரச்சனையைக் கிளப்பாதீங்க. என்று போகிறது கடிதம். இதுல அடிநாதம் என்னன்னா உனக்கு எம்புட்டு குடுத்திருக்கோம், வச்சுக்கிட்டு நன்றியோட இருக்கத் தெரியலயே, என்னத்துக்கு சும்மா கம்ப்ளெயிண்ட் பண்ற, என்ற மனோநிலை. பீடத்திலிருந்துகொண்டு எழுதுகிற பண்டிட்டுகளின் குரல் அது.

அவ்வளவுதான் பேச்சு. எங்கு போனாலும் விடாத சாதிப் பாகுபாடு. பல முறை இந்த வலைப்பதிவுல அடிச்சுக்கிட்டு செத்த விஷயம்தான். ஆனாலும் பேசப் பட வேண்டியது. எது இதைக் கட்டிக் காக்குது? இந்து சமூக அமைப்பு. இதுக்குள்ளேருந்து ஒரு தாழ்த்தப் பட்டவன் தலை நிமிர்வது கடினம். எந்தத் துறையிலும் தலித் எதிர் கொள்ளும் பிரச்சினை. தலித் ஐ.ஏ.எஸ்ஸ¤க்கு வேலையில் நிகழும் சிறுமைப்பாடுகள். பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்தாலும் தலித் என்பதாலேயே கோட்டா என்ற கிண்டல். தலித் கட்சித் தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள். (திருமா தெளிவாகச் சமீபத்திய உரையில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். திராவிடக் கட்சிகள் அரவணைக்கலைன்னா அதைக் கிண்டல் செய்பவர்களுக்கு தலித் மேலயா அக்கறை? இல்ல. கீழ்க்குடிகள் ரெண்டு பட்டதால வந்த ரகசிய சந்தோஷம்.) ஆக தலித் என்பவர் மற்ற நடுக்குடிகளைப் போலல்லாமல் தொடர்ந்து இரட்டை உணர்நிலையில் ஊசலாட்டப் பட்டிருக்கிறார், தொழில் முறையிலும் சமூகத்திலும் சவால்களை எதிர் கொள்கிறார். இன்றைய தேதியில் தலித்துகளை நேரடியாகத் தாக்குபவர்களாகட்டும், மறைமுகமாகக் கிண்டல் செய்பவர்களாகட்டும், அல்லது உன் கதையை நானெழுதுகிறேனென்று கிளம்பியிருக்கும் பார்ப்பன தலித்-எளக்கியவியாதிகளாகட்டும், யாராயிருந்தாலும் அவர்களது நோக்கங்களைக் கூர்ந்து கவனித்தால் அது சாதி என்கின்ற இந்து மனக் கட்டமைப்பிலேயே அடிப்பிடித்திருப்பதைக் காணலாம். சில நேரங்களில் அது கொஞ்சம் வளர்ந்து பரிணமித்தது போலப் பல்லிளிக்கும்; இந்திய தேசிய ஒருமைப்பாட்டு முகமூடியைப் போட்டுக் கொண்டிருக்கும்; கூர்ந்து கவனித்தால் அது அதே சாதீய இந்து மன அடிப்பிடிதான்.

நன்றி : சுந்தரவடிவேல்

This page is powered by Blogger. Isn't yours?