Friday, February 24, 2006
Thanks Vikatan
‘‘விடைபெறக் காத்திருக்கிறேன்!’’
‘‘எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும், இளம்பெண்களும், முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை. இதோ, இன்னும் மூன்று மாதம்தான் எனக்கு ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அதற்காக நான் பயப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால், ஒரு முக்கிய வேலை இருக் கிறது. அதற்கு இன்னும் எட்டு மாதம் நான் வாழ்ந்தாக வேண்டும். உயிர் வாழ்தலின் இறுதி முயற்சியாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறேன்’’ என்கிறார் புஷ்பராஜா. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தைத் துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவர். இப்போது அரசியல் தஞ்சமடைந்து பிரான்ஸில் வசிக்கிறார்.
‘‘யாழ்ப்பாணம் மயிலிட்டிதான் என் சொந்த ஊர். எழுபதுகளின் துவக்கத் தில் சிங்களப் பேரினவாதத்தின் அடக்கு முறைகளை எதிர்கொள்ள, ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை நோக்கித் திரும்பிய காலம். சிங்கள ஆதிக்கத்தை எதிர்க்க அஹிம்சை உதவாது, ஆயுதம் தான் உதவும் என்று முடிவெடுத்து, அதுவரை நான் இருந்த தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகி, தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பை நானும் சிவக்குமாரன், சத்யசீலன் போன்ற சில நண்பர்களும் சேர்ந்து துவக்கினோம்.
ஈழ விடுதலையில் ஆயுதப் போராட் டத்தை முதன்முதலாகத் துவக்கி வைத்தது மாணவர் பேரவைதான். பின்னர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினராகவும் போராளியாகவும் இருந்தேன். அதே காலகட்டத்தில் ஈரோஸ், டெலோ, இ.என்.டி.எல்.எஃப், தமிழ் புதிய புலிகள் என ஏழெட்டு அமைப்புகள் ஈழத்தில் முளைத்தன.
காக்கைகளுக்கு முன்பே நாங்கள் விழித்தெழுவோம். எமது மக்களின் உண்மையான விடுதலைக்கு எதிரியாக இருந்த சிங்களவர்களைத் தேடி அலை வோம். போர்ப் பயிற்சிக்காக பல்வேறு குழுக்களும் பாலஸ்தீனத்துக்கும், இந்தியாவுக்கும் போயின. எல்லோருக் கும் ஆயுதம் கிடைத்தது. தமிழகத்திலும், வட இந்தியாவிலும் எங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. வேதாரண் யத்தில் எங்களைக் கொண்டுவிடவும், அழைத்துப்போகவும் படகுப் போக்கு வரத்து குறிப்பிட்ட நாட்களில் இருந்தது. எல்லோரும் ஈழ விடுதலைக்காகப் போராடினோம். எனினும், நாங்களும், மற்ற ஆயுதக் குழுக்களும் விடுதலை பற்றிய தத்துவக் கோட்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தோம். இது சகோதரக் கொலையில் கொண்டு போய் எங்களை நிறுத்தியது.
எங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. வேறு வேறு குழுக்கள் வேறு வேறு தத்துவங்களைக் கொண்டு இருந்தன. ஆனால், அடிப்படைக் கொள்கை ஒன்றுதான்... அது, தமிழ் ஈழம் அடைவது!
எண்பதுகளில் தொடங்கி இன்று வரை ஈழத்தில் சகோதர யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 6,000 பேர். சுடப்பட்டும், மின்சாரக் கம்பங்களில் தொங்கவிடப் பட்டும் கொலை செய்யப்பட்ட இந்தப் போராளிகளெல்லாம் யார்? சிங்களர்களா? இலங்கை ராணுவத்தினரா? இல்லை, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகத் தங்களின் வீட்டை, சொந்தங் களைத் துறந்து, ஆயுதம் தரித்தவர்கள்!
ஈழத்துக் கவிஞர் சிவசேகரத்தின் கவிதை ஒன்று...
துரோகி எனத் தீர்த்து
முன்னொரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றஞ் சாட்டியவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனைச்
சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச்
சுட்டது
சும்மா இருந்தவனையுஞ்
சுட்டது.....
இப்படி ஒரு சூழலில்தான் நானும் கொலை செய்யப்படுவேன் என்று பயந்தேன். ஒன்று, என் எதிரிகளால். இன்னொன்று, ஆயுதம் தரித்த என் நண்பர்களால். ‘இது கொலைகாரங்க பூமி ஆயிடுச்சு. நாம இனிமே இங்கே இருக்க வேண்டாம். வேற எங்காவது போயிடலாம்’ என்று என் காதலி சொன்னாங்க. அதற்கு அடுத்த நாள், அதாவது 82&ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டோம். என் உடன்பிறந்தவர்கள் ஒன்பது பேர். அழகான கூடு மாதிரி இருந்தது வீடு. அந்தக் கூட்டை நானேதான் கலைத்துவிட்டு என் மனைவியோடு பிரான்ஸ§க்கு வந்தேன். இதோ 24 ஆண்டுகளாகிவிட்டன.
உலகத்தின் எந்த மூலையில் சுற்றி அலைந் தாலும், தாயகக் கனவு என்னை அலைக் கழித்துக்கொண்டேதான் இருந்தது. தேவைக்கு அதிகமாகக் காசிருந்தால் குடிப்பேன். போதை, நிறைய விஷயங்களை மனந்திறந்து பேசவும், கூடிக் கதைக்கவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. கிடைக்கிற வேலையெல்லாம் செய்தோம். ஈழத்தின் சாதீய சமூகம் எந்தெந்தத் தொழிலை எல்லாம் செய்யக் கூடாத தொழிலாக விலக்கி வைத்ததோ, அதையெல்லாம் செய்தோம்.
தாய் மண்ணைத் தொலைத்து, புதிய சூழலில், புதிய உறவுகளை நாங்கள் தேடிக்கொண்டோம். என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை இப்படித்தான் அந்நிய மண்ணில் கழிக்க நேர்ந்தது’’ என்று உலர்ந்த உதட்டை ஈரப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசுகிறார் புஷ்பராஜா.
‘‘கடந்த ஜனவரி மாதம், பொங்கல் அன்று எனக்குக் கடுமையான வயிற்று வலி. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு நாள் கழித்து, மீண்டும் மிகக் கடுமை யான வலி வயிற்றைப் பிடுங்கி எடுக்க, பிரான்ஸில் உள்ள மருத்துவமனைக்குப் போனேன். டாக்டர் என்னைச் சோதித்துவிட்டு, ‘உங்களுக்கு வேண்டியவர்கள் எங்கிருக்கிறார்கள்?’ என்று கேட்டார். எனக்கு என் நிலைமை புரிந்துவிட்டது. பின்பு, ‘உங்கள் கல்லீரல் புற்றுநோயால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்றார். என் மனைவியும், குழந்தை களும் கதறி அழுதார்கள். என் முப்பத்தைந்து வயதில், என் அம்மாவும் அப்பாவும் இறந்தபோதுகூட நான் என் தாய் நாட்டுக்குப் போனது கிடையாது. போக வேண்டும் என்ற எண்ணம்கூட வந்தது கிடையாது. மயிலிட்டி இப்போது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என் எண்ணம் முழுக்க வேறொன்றில் இருந்தது.
ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்று நூலை எழுதும் முயற்சி அது. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்கிற நூலை எழுதியிருக் கிறேன். அடுத்ததாக இன்னும் இரண்டு நூல்களை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஒன்று, ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்கு. இன்னொன்று, சிங்கள ஆட்சியாளர்கள் காலங்காலமாகத் தமிழர்களின் உரிமை களை எப்படியெல்லாம் காலில் போட்டு மிதித்தார்கள்... தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் எப்படி சிங்கள ஆட்சிக்குத் துணை போனார்கள் என்பதை எழுத ஆசைப்பட்டேன். அதற்குக் குறைந்த பட்சம் இன்னும் எட்டு மாதங்களாவது நான் உயிரோடு இருக்க வேண்டும்.
இங்கே, சென்னையில் ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். அங்கே என்னைப் போல் கேன்சர் நோயாளிகள் நிறைய பேரைப் பார்த்தேன். சின்ன குழந்தைகள், இளம்பெண்கள் என ஏராளமானோர் வெளியில் தங்களுக்கான தீர்ப்பைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்தார்கள். அங்கிருந்த சிலரிடம் பேசியபோது, நான் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.
நான் மருத்துவரீதியாக இப்போது சில முயற்சிகளை எடுத்திருக்கிறேன். அது வெற்றி பெறுமா, தோல்வியுறுமா... தெரியவில்லை. நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. என் வீட்டார் கடவுளை நம்புகிறார்கள். இதுதான் உலகம், இப்படித்தான் வாழ்க்கை என்று விவரம் தெரியத் துவங்கிய காலத்தி லிருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பெரியாரிஸ்ட்!
தேதியை நிச்சயித்தபடி வரும் மரணத்தில் சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டு, துரிதமாக முடிக்கலாம். எழுத விரும்புவதை எழுதலாம். சந்திக்க விரும்பும் நண்பர்களைச் சந்தித்து அளவளாவி மகிழலாம். ஆனால், என்ன ஒன்று... இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கப் போகிறோம் என்பதால், ஆசை கட்டுக்கடங்காமல் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை ஆசைகளும் இவ்வளவு நாள் எங்கே இருந்தன என்று தெரியவில்லை. இறுதித் தேர்வை எழுதும் மாணவன் போல் என்னை உணர்கிறேன்.
எழுதலாம் என்று அமர்ந்தால், சோர்வாக இருக்கிறது. ஆனாலும், நான் விடாப்பிடியாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கை ஊக்கம் தருகிறதென்றால், மருந்துகள் வாட்டி வதைக்கின்றன. நோயாளியாக இருக்கிறோம் என்கிற உணர்வே ஒரு படபடப்பை ஏற்படுத்துகிறது. எனக்கு ஏற்கெனவே பைபாஸ் சர்ஜரி நடந்திருக்கிறது. இப்போது மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதற்கு என் உடம்பு ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை.
ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு, ஆக்ரமிக்க முயலும். எப்போதும் அந்நிய சக்திகளைவிட, ஈழப் பிரச்னையில் இந்தியா நேர்மையுடனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தலையிடுவதைத்தான் போராளிகள் விரும்புவார்கள். என் விருப்பமும் அதுதான்!’’ என்கிறார் புஷ்பராஜா.
கடைசியாக, புஷ்பராஜாவுக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முயற்சியையும் அவர் உடம்பு தாங்காது என்பதால் மருத்துவர்கள் கைவிட்டு, அவரது கடைசி நாட்களை சொந்த மண்ணிலேயே சென்று கழிக்கும்படி சொல்லிவிட்டார்கள்.
‘‘எனக்கேது சொந்த மண்? நான் எங்கே செல்ல முடியும்? நாளை அமையவிருக்கும் தமிழ் ஈழத்தைக் காண நான் உயிரோடிருக்க மாட்டேன். நான் பிறந்த மண்ணே... நான் வாழ முடியாத மண்ணே... ஒரே ஒரு கேள்வி உன்னிடம்... வெடி மருந்து வீச்சமில்லாத உன் தெருக்களில் எம் பிள்ளைகள் நடக்கின்ற நாள் என்று வரும் எம் மண்ணே?’’