<$BlogRSDURL$>

Friday, May 05, 2006

Thanks Cheran 

பூக்களின் நறுமணம் ஊர் புகழும்.

வேர்களின் புழுக்கம் யாரறிவார்?

ஒரு யானை நடந்து செல்லும் போது அதன் காலடியில் நசுங்கிச் சாகும் சிற்றெறும்புகள் பற்றி சரித்திரம் பதியாது. அப்படி ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் இருக்கிற காயங்கள், சோகங்கள், தியாகங்கள் அவரவர் மனமே அறியும்!

என் ‘பாண்டவர் பூமி’க்கு ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான். கலகக்காரர். சமகாலச் சினிமாவில் என்னைப் பாதித்த நல்ல படங்களில் ஒன்று... தங்கரின் ‘அழகி’. ஒரு நாள் தன் புதிய படத்தின் கதையை என்னிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் தங்கர். ‘‘நல்லா இருக்கு தங்கர்’’ என்ற என்னிடம், ‘‘எப்போ ஷ¨ட்டிங் போலாம்?’’ என்று கேட்டார். முதலில் எனக்குப் புரியவில்லை.

‘‘அட, இதுல நீதாம்ப்பா நடிக்கணும். உன்னைவிட்டா இதுக்கு நான் வேற யாரை யோசிக்கிறது?’’ என்றார் சாதாரணமாக. ‘‘என்னது... நான் நடிக்கிறதா? ஹலோ, ஆளைவிடுங்க. எனக்கு நடிக்கவெல்லாம் வராது’’ என்றேன் கூச்சத்தில்.

‘‘பாரு, நான் கதாநாயகன் தேடி வரலை. இந்தக் கதையைச் சொல்ல ஒருத்தன் வேணும். அவ்ளோதான். வீட்ல ரோட்ல நாம பார்க்கிற சாதாரணமான பையனா இருக்கணும். நீ ஷ¨ட்டிங் ஸ்பாட்ல மத்தவங் களுக்கு நடிக்கச் சொல்லிக் குடுக்கிறதை நானும் பாத் திருக்கேன், அது போதும் எனக்கு’’ என என்னைச் சம்மதிக்கவைத்துவிட்டார்.

முதல் முறை மேக்&அப் போட்டபோது, நிஜமாகவே கூச்சமாக இருந்தது. எனக்கு ஆதரவாக நின்று தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் சாரும் தங்கர்பச்சானும் என் வாழ்வில் இன்னொரு அத்தியாயத்தை ஆரம்பித்துவைத்தார்கள்.

‘சொல்ல மறந்த கதை’ பற்றி சொல்ல மறக்கக் கூடாத ஒரு நினைவு உண்டு எனக்கு.

நான் நடித்த முதல் படம். அபிராமி தியேட்டரில் முதல் காட்சி!


அம்மா, அப்பா, தங்கைகள், மனைவி, குழந்தைகள் என எல்லோரையும் அழைத்துப் போயிருந்தேன். அபிராமி தியேட்டரின் உரிமையாளர் ராமநாதன் வந்தார். என் அப்பா மட்டும் கும்பிட்டபடியே நிற்க, ‘‘சார்! இது எங்க அப்பா’’ என்றேன். ‘‘வணக்கம், வணக்கம்’’ என்று அருகில் வந்தவரிடம், அப்பா லேசான பதற்றத்துடன் ‘‘மொதலாளி என்னைத் தெரியுதுங்களா?’’ என்றார் கும்பிட்ட கைகளுடன். ‘‘நான் பாண்டிங்க. மதுரப் பக்கம் பழையூர்பட்டிக்காரன். அங்க வெள்ளலூர்ல காளையப்பா டூரிங் டாக்கீஸ் ஆபரேட் டருங்க. இங்க நம்ம தியேட்டர்ல ரெண்டு வருஷம் ஆபரேட்டரா இருந்தேனுங்க. உங்க கையால சம்பளம் வாங்கி யிருக்கேன் மொதலாளி’’ என்றதும், பதறி அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்ட ராமநாதன் நெகிழ்ந்துபோனார்.
‘‘அய்யா, நீங்க கொடுத்துவெச்சவங்க. எத்தனை பேருக்குக் கிடைக்கும் சொல்லுங்க, இந்தக் கொடுப்பினை. நீங்க வேலை பார்த்த தியேட்டர்லயே இன்னைக்கு உங்க பையன் நடிச்ச படம் ஓடுது. எல்லாம் உங்க மனசுதாங்க’’ என்றார்.

படம் முடிந்து வெளியே வந்தோம். என் பின்னாலேயே வந்தார் அப்பா. என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். ‘‘என்னப்பா?’’ என்றேன். எதுவுமே சொல்லாமல், எல்லாம் சொல்லும்படியாகச் சிரித்தார் கண்கள் பனிக்க.

*************************
ஆணுக்குப் பெண் எப்போதும் அதிசயம்தான். ‘அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது: அபிமானம் மாறாது’ என்கிற தேவதாஸின் குரலே மிகச் சரியான தீர்மானம். ‘ஒருமுறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு. அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது’ ; இது கவியரசர் எப்போதோ எழுதிய பாடல். எப்போதும் பொருந்தும் பாடல்.

வயசும் மனசும் விழிக்கும் வேளையில் முளைக்கிறது அவரவர்க்கான முதல் சூரியன்! பெயர் தெரியாப் பறவைகளின் சிறகசைப்பில் திளைக்கிறது இளமை வானம். பயத்திலும் தயக்கத்திலும் உதிர்கின்றன சிலபல நட்சத்திரங்கள். வழி நெடுக முளைக்கின்றன கனவுத் தாவரங்கள். பூக்களின் நறுமணத்தில் கிறுகிறுக்கின்றன இதயக் கூடுகள். நழுவவிட்டதில் பிரபஞ்சமெங்கும் கோடிக்கோடி ரத்தச் சில்லுகள்.நெஞ்சை அறுக்கின்றன ப்ரியப் பறவைகளின் நினைவுப் பாடல்கள்!

இப்படிக் கடந்த வாழ்வில் இழந்த தேவதைப் பெண்கள் குறித்த மென்சோகங் கள் இருக்கின்றன எல்லோரிடத்திலும். ‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்த கதை’ எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு பெண்ணுக்கும் அதிக மாக நேசித்தவர்களே இங்கே நிறைய. அப்படி நம் வாழ்வை நிறைத்த காதல்கள் பற்றிய ‘ஆட்டோகிராஃப்’ பண்ண ஆசைப் பட்டேன்.

முன்னணியில் இருக்கும் நாயகர்கள் சிலரிடம் கதை சொன்னேன். ‘‘ரொம்ப ஃபீலிங்கா இருக்கு சார். ஆனா, இது கொஞ்சம் ரிஸ்க்கா இருக்குமோ?’’ எனச் சிலர் தயங்கினார்கள். ‘‘தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண் டுன்னு நம்ம படம் வருஷத்துக்கு ரெண்டு மூணாச்சும் ரிலீஸா கணும். நீங்க சொல்ற தைப் பார்த்தா, வெயிட் குறைச்சு லாங் ஹேர் வளர்த்து ஒரு வருஷம் ஓடிப் போயிருமே’’ எனச் சிலர் ஆர்வம் இருந்தும் ஒதுங்கினார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல், நான் உடைந்து திரிந்தபோது, எனக்கு உரமாக இருந்தவர்கள், நண்பர்கள்.

‘‘நீயே பண்ணிடு சேரா!’’ என்றனர். ஒரு நடிகனாகத் தொடர்வது பற்றிய யோசனையே இல்லை எனக்கு. ‘‘அட, இது உன் வாழ்க்கை. ஒரு சாதாரண பையனோட கதை. தைரியமா செய்’’ என்றனர். அதன் பிறகு நான் யோசிக்கவே இல்லை. ஆனால், இந்தக் கதைக்குப் புதிதாக ஒரு தயாரிப்பாளர் தேட எனக்கு மனம் இல்லை. அது மறுபடி என்னைச் சோர்வின் உச்சத்துக்குக் கொண்டுபோய் நிச்சயம் குப்புறத் தள்ளிவிடும் என்று தெரியும். நானே தயாரிக்க முடிவு செய்தேன். ‘ஆட்டோ கிராஃப்’ படம், எனக்கு மிக நல்ல இதயங்களையும் மிகக் கொடூர முகங்களையும் ஒருசேர அறிமுகப் படுத்திய அனுபவம்.

‘மனசுக்குள்ளே காதல் வந்துச்சா’ பாடலுக்கு, குளுமையான ரசனை களைக் குவித்துக் காட்சி பிரித்தோம். ஆதாம் & ஏவாள் ஆப்பிள் முதல், தமிழ்ச் சேலை வரை ஒவ்வொரு காட்சியையும் கவிதைப்படுத்தினோம். அதில் ஒன்று இளவரசனாக நான் வாள் வீசி விளையாடும் அரண்மனைக் காட்சி. மேக்&அப் ரூமில், அத்தனை பெரிய கண்ணாடிக்கு முன்னால் அரசிளங்குமரனாக மாறிக்கொண்டு இருந்தேன். என்னைப் பார்க்க எனக்கே பெருமிதமாகவும் வெட்கமாகவும் இருந்தது.

அரங்கில் நின்று நான் வாள் வீசிப் பழகும்போது, ‘‘சார், ஊர்லேர்ந்து உங்க ஃபாதர் வந்திருக்காருங்க’’ என்றனர். திரும்பிப் பார்த்தால், தன் பிறவிப் பெரும் பயனை அடைந்துவிட்ட பரவசத் தில், என் அப்பா!
‘‘சேரா, அப்பிடியே வாத்தியார் போலவே இருக்கப்பா. ‘ஆயிரத்தில் ஒருவன்’கெணக்கா’’என்றார்.

‘‘உத்தமபுத்திரன் சிவாஜி மாதிரி இருக்கேன்னு சொல் றாங்க’’ என்றேன்.
‘‘யாரு சொன்னா? சும்மா ஏமாத்துவாய்ங்கப்பா’’ என்ற எம்.ஜி.ஆர். ரசிகர் கேட்டார் என்னிடம் ஆசையாக... ‘‘ஏம்ப்பா, ஒம் பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா?’’

டூரிங் டாக்கீஸ் ஆபரேட்டரின் மகன் சினிமாவில் அரசன் ஆன கதை இதுதான்!

ஒரு கதவு மூடினால், மறு கதவு திறக்கும் என்பார்கள். சினிமாவில் நான் சம்பாதித்தது நம்பிக்கை. ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் வெற்றி, என்னை இன்னும் இன்னும் உயரம் தொட, ஆழம் தேட அழைத்துச் செல்கிறது. நம்பிக்கை விதைப்பதே நல்ல படைப்பு எனத் திடமாக நம்புபவன் நான்.
இன்று நான் இருக்கிற இந்த இடத்துக்கு இரண்டே காரணங்கள், ஒன்று, நேர்மையான முயற்சியும் கடுமையான உழைப்பும் நம்மைக் கைவிடாது என்ற அனுபவம். முக்கியமான மற்றொன்று... என் வாழ்நாளின் வழிநெடுக என்னைத் தங்களின் தோளிலும் இதயத்திலும் தூக்கிச் சுமந்த நல்ல ஆத்மாக்கள்!

வடபழனிச் சாலைகளில் வண்டியில் செல்லும்போது... தெருவோரக் கடைகளில், நடைபாதைகளில், பழைய சைக்கிள்களில், பஸ் படிக்கட்டுகளில் சில நேரங்களில் சில மனிதர்களைப் பார்க்கும்போது தூக்கிவாரிப்போடும்.

திசை தெரியாது நான் தடுமாறிய தருணங்களில், என்னைத் துரத்தியடித்த பெரியவர்கள்; தளர்ந்து நான் தவித்த போது ஆறுதலாக இருந்த சகோதரர்கள்; என் சின்னக் கனவுகளுக்கும் சிறகு பூட்டிப் பறக்கவிட்ட நண்பர்கள்; எனக்கு முன்னும் பின்னுமாக ஓடி வந்து இடையில் களைத்துநின்றுவிட்ட கலைஞர்கள் என ஒவ்வொரு முகமும் ஒரு கதை சொல்லும். அப்படிப் பலர் இன்னும் ஒரு வாய்ப்புக்காக, வாழ்க்கை யைப் பணயம் வைத்து அலைகிறார்கள்.

என்னைவிடத் திறமைசாலிகள், புத்திசாலிகள் நிறைய பேர் உண்டு இங்கு. ஆனால், நான் காரில் செல்ல அவர்கள் தெருவில் திரிவது எதனால்? எது எப்படி யாரை இடம் மாற்றுகிறது?

சிலர் விழுவதும், சிலர் எழுவதும் ஒரே இடத்தில்தான். அது உழைப்பு!
தொலைதூரத்துக் கிராமத்துச் சிறுவன் நான். எனக்கு இருந்தது கனவுகூட இல்லை, எத்தனையோ பேருக்கு இருப்பது போல சினிமா மீது ஓர் ஆசை, அவ்வளவே!

இலக்கியங்களும் தெரியாது. இலக்கணங்களும் புரியாது. ஆனாலும், ஆசை வளர்த்தேன். தளபதி ஆவதற்கு முதல் தகுதி... சிப்பாயாக இருப்பது என்பதை எனக்கு உணர்த்தியது காலம். சுய மரியாதை என்ற சொல்லையும் அதன் பொருளையும் மறக்கடிக்கிற அளவுக்கு என்னை இழுத்தெறிந்தது வாழ்க்கை. இருந்தாலும் இழக்கவும் இல்லை. இரையாகவும் இல்லை.
எதுவும் தெரியாதுதான் எனக்கு. ஆனால், எல்லாம் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் ஆசையும் இருந்தது. எச்சில் தட்டைக் கழுவியபோது காட்டிய ஒழுங்குதான், எடிட்டிங் டேபிளிலும் கைகொடுக்கிறது. பசியும் பட்டினியுமான பால்யம்தான், சக மனிதர்களை நேசிக்கக் கற்றுத் தந்தது. எத்தனையோ பேர் என்னைத் தொட்டுத் தூக்கியதன் நன்றிதான் என்னை இப்போது நேர்வழியில் செலுத்துகிறது.

எனக்கு நேர்ந்த அவமானம் இன்னொரு வனுக்கு நேரக் கூடாது என்பது என் தன்மானம். எனக்குக் கிடைக்காத அன்பு, என் சார்ந்த கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பது நான் கற்றுத் தேர்ந்த பண்பு.
உலகத்தின் மிகச் சிறந்த நறுமணம், வியர்வையின் வாசம் என்பதை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்!

கூட்டுப் புழுவாய்க் குறுகிக்கிடக்கும்போது, அவமானத்தில் கூச வேண்டிய அவசியம் இல்லை. அது காலம் நமக்குச் சிறகு தயாரிக்கும் களம் என்பதைப் பட்டாம்பூச்சிகளே சொல்லும்.

வாழ்க்கை ஒரு பரமபதம் போல, தன் வழி நெடுக வாய்ப்புகளை ஒளித்துவைத்திருக்கிறது நண்பர்களே...

பசி இருந்தால்தான் புரியும் ருசி!

( இந்த கடைசி வரி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. சோறை ருசிக்காக சாப்பிடுவது அதற்கு செய்யும் அவமரியாதை என்று படித்திருக்கிறேன். "அவ மாருக்காகவே அவளை நான் காதலிக்கிறேன்" என்று சொலவதை போல அது குரூரமானது என்று பாலாவின் எழுத்துகளில் படித்த நியாபம. மேலும் வேளா வேளைக்குச் சாப்பிடும் மென் பசி இருப்பவனுக்குத்தான் பசியிலும் ருசி தெரியும். பலவேளை பட்டினி கிடந்தவனுக்கு..?? ஒரு வேளை சேரன் சொன்னது முதல் வகையோ..?? )


This page is powered by Blogger. Isn't yours?